சிறுவன் கொலை வழக்கு: சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது கை கால் முறிவு


சிறுவன் கொலை வழக்கு:  சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது கை கால் முறிவு
x

மேட்டூர் அருகே சிறுவன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க முயன்ற போது கை கால் முறிவு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பொக்கிஷம் (வயது 17) இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மேட்டூர் அடுத்த கருமலைக்குடல் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்காக டுடோரியல் காலேஜ் படித்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு வேலைகளுக்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மாமா வடிவேல் கருமலை கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வெல்டிங் தொழிலாளியான கவினின் தாயாரை சிறுவன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கவின் அவரை தாக்கியுள்ளார்.

இதில் ஏற்பட்ட தகராறில் மேட்டூர் அணை அருகே அழைத்துச் சென்று சிறுவனை அடித்து உதைத்துள்ளனர். இதில் சிறுவன் உயிரிழந்தார்.

இதனால் செய்வது அறியாமல் தவித்த கவினின் நண்பர்கள் சிறுவனின் உடலை உபரி நீர் செல்லும் பாதை பாய்ந்தோடும் தண்ணீரில் தூக்கி எறிந்து விட்டு வீடு திரும்பி விட்டனர்.

இதனை அடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆனந்த் மற்றும் கோபி ஆகிய இருவரையும் கருமலை கூடல் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கார்த்திக், சதீஷ் ஆகியோரை போலீசார் பிடிக்க முயன்ற போது இவர்கள் இருவரும் பைக்கில் தப்பி ஓட முயன்றனர். அப்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் இருவரையும் மீட்ட கருமலைக்கூடல் போலீசார் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story