ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் - சீமான்


ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் -  சீமான்
x

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாதென திமுக அரசு கைவிரித்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல்துறையினரால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்து, சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்தும் அதனைச் செயல்படுத்த மறுக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

தூத்துக்குடியில் மண்ணின் மக்கள் மீது திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசப் பயங்கரவாதத்தை, 14 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமான கொடுஞ்செயலைக் கொலைக்குற்றமெனக் கருதி, அதனைச் செய்த காவல்துறையினர் மீதும், காரணமான அதிகார வர்க்கத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்காது, விதிமீறல் போலக் கருதித் தொடர்புடையவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையோடு நிறுத்திக்கொண்ட திமுக அரசின் போக்கு வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.

படுகொலைக்கு சாட்சிகளும், ஆவணங்களும் இருந்தும்கூட நடவடிக்கை எடுக்கத் தயங்கும் திமுக அரசின் செயல்பாடு மிகப்பெரும் மோசடித்தனமாகும். போராட்டத்தின்போது மக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி, சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாகவே மக்கள் நின்றார்கள் என்பதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்று குவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளித்திருக்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம்.

இதனைக் கொண்டு துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருக்கும்போது, அதனைச் செய்ய மறுத்து திமுக அரசு பின்வாங்குவது ஏன்? அதிமுகவோடு வார்த்தைப்போரில் ஈடுபட்டுவிட்டு, நிர்வாகரீதியாக அதிமுகவின் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் காப்பாற்றும் தந்திரத்தில் ஈடுபடுவது எதற்காக முதல்வரே? இதுதான் அதிமுகவை எதிர்க்கிற இலட்சணமா?.

தங்கை ஸ்ரீமதி மரணத்திற்கு நீதிகேட்டுப் போராடிய இளைஞர்கள் மீதும், சமூகவலைதளங்களில் கருத்துப்பரப்புரை செய்த பொதுமக்கள் மீதும் வழக்குப் பதிவுசெய்து சிறைப்படுத்திய திமுக அரசு, தூத்துக்குடியில் 14 பேரைக் கொன்ற கொலையாளிகள் மீதும், துணைபோன அதிகார வர்க்கத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சிறைப்படுத்த மறுப்பதேன்? இதுதான் நீங்கள் காக்கிற சமூக நீதியா? காவல்துறையினரை ஏவிவிட்டு மக்களைக் கொன்றுகுவித்த அதிமுக அரசுக்கும், கொலையாளிகளென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு?.

மாநில அரசின் கைகளிலே அதிகாரமிருந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தும், அதனை செய்வதற்குரிய ஆதரவு மக்களிடமிருந்தும் விடாப்பிடியாய் செய்ய மறுத்து கொலையாளிகளைக் காப்பாற்றுவது ஏன் முதல்வரே? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா? யார் யார் குற்றவாளிகளோ அவர்களெல்லாம் நிச்சயமாகக் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என சட்டமன்றத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, இன்றைக்கு அவ்வாக்குறுதியை மொத்தமாய் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கொலைக்குற்றவாளிகளைக் காப்பாற்றத் துணைபோ யிருப்பதென்பது வெட்கக்கேடானது.

இதுமட்டுமல்லாது, கொடநாடு கொலை வழக்கு, இசுலாமிய சிறைவாசிகளது விடுதலை, ஸ்ரீமதிக்கான நீதிவிசாரணை என எல்லாவற்றிலும் பேச்சளவோடு நின்றுகொண்டு, செயல்பாட்டளவில் எதுவொன்றையும் செய்யாது காலங்கடத்தும் திமுக அரசின் தொடர் செயல்பாடுகள் யாவும் மக்களை ஏமாற்ற முனையும் அப்பட்டமான கண்துடைப்பே அன்றி வேறில்லை.

ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் துள்ளத் துடிக்கப் பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் திமுக அரசு வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




Next Story