கிரைம்செய்திகள்


கிரைம்செய்திகள்
x
திருச்சி

ஓடும் பஸ்சில் நகை-பணம் திருட்டு

*தேனி மாவட்டம் செட்டிப்பட்டி குருசாமி தெரு வடக்கு ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி சுமதி (வயது 40). சம்பவத்தன்று சொந்த வேலையாக திருச்சி வந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தனது வேலையை முடித்துக் கொண்டு மத்திய பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். அப்போது, தற்செயலாக பையை பார்க்கும்போது, அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.3 ஆயிரத்து 500 திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கில் தேடப்பட்டவர் கைது

*திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் வந்தது. அந்த பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மீது வழக்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏர்போர்ட் போலீசார் அவரை பிடித்து ஒரத்தநாடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

என்ஜினீயர் தற்கொலை

*சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி வடகரையை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் பிரேம் பெலிக்ஸ்ராஜ் (26). என்ஜினீயரிங் படித்து வந்த அவருக்கு, அதற்கான வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் டிராக்டர் ஓட்டி வந்தார். இந்நிலையில், அவர் ரென்சியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் படிப்புக்கேற்ற வேலையும் கிடைக்காத மனவிரக்தியில் இருந்த பிரேம் பெலிக்ஸ்ராஜ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருவானைக்காவலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாட்டு வண்டி பறிமுதல்

*தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி கிராம நிர்வாக அதிகாரி மணிவண்ணன் மற்றும் கிராம உதவியாளர் ருக்மணி ஆகியோர் தலைமையில் கொளக்குடி கருப்பனாம்பட்டி செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டுவண்டியில் ஏரி மண் அள்ளி கடத்தி வந்ததாக கொளக்குடி அடுத்த காட்டூரை சேர்ந்த பெரியசாமி என்பவரை பிடித்து தொட்டியம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

தற்கொலை

*சமயபுரம் அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் முருகன் (45). இவருக்கு திருமணமாகி ருக்மணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். முருகன் சமயபுரத்தில் தள்ளு வண்டியில் மீன் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு மரத்தில் முருகன் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி டிரைவர் சாவு

*மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் படுத்திருந்த டிரைவர் தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையைச் சேர்ந்த செல்வம் (45) என்பவர் இறந்து கிடந்தார். மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு டைல்ஸ் ஏற்றிச் சென்றபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்ததாக தெரிகிறது. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story