காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு


காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா உடல் தகனம் – இறுதி ஊர்வலத்தில் தலைவர்கள் பங்கேற்பு
x

இன்று நடைபெற்ற திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, அமைச்சர் முத்துசாமி, ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

நேற்று மதியம் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஈரோட்டில் உள்ள வீட்டில் வைகப்பட்ட அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவனின் கைகளை பிடித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோரும் திருமகன் ஈவேராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற திருமகன் ஈ.வெ.ரா.வின் இறுதி ஊர்வலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, அமைச்சர் முத்துசாமி, ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருங்கல்பாளையம் காவேரி கரை மின் மயானத்திற்கு, ஆர்கேவி சாலை, கருங்கல்பாளையம் வழியாக அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் காத்திருந்த பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கருங்கல்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் திருமகன் ஈவெரா உடல் தகனம் செய்யப்பட்டது.


Next Story