செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி


செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவி
x

செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் உதவியை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

செங்கல்பட்டு

நலத்திட்ட உதவி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மண்டலத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக 100 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மறைமலைநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்றினார். காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் முருகன் கூட்டுறவுத்துறை குறித்த திட்ட விளக்க உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஜமீன் பாண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து 100 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி மற்றும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.17 கோடி 39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் சங்க பயன்பாட்டிற்காக ரூ.56 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான 2 மினி லாரிகளும் வழங்கினார்.

சலசலப்பு

விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது விழா மேடையின் முன்பு அமர்ந்திருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களை பார்த்து இங்கு அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் ரூ.1000 வந்திருக்கும் என்றார் அப்போது விழாவுக்கு வந்திருந்த 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கையை உயர்த்தி எங்களுக்கு ரூ,.1000 வரவில்லை என்று ஒரே மாதிரியாக குரல் எழுப்பினர்.

இதனை பார்த்த அமைச்சர் உடனே பலர் கலைஞர் உரிமை தொகை விண்ணப்பம் செய்யும் போது பலர் உரிய ஆவணங்கள் வழங்காததால் குறுஞ்செய்தி வந்திருக்காது. தற்போது தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையங்கள் மூலம் கலைஞர் உரிமை தொகை விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. எனவே அனைவருக்கும் ரூ.1,000 கலைஞர் உரிமை தொகை கிடைக்கும் என்றார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கண்காட்சி

இதனை தொடர்ந்து, கூட்டுறவு துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. டி.மூர்த்தி, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், மறைமலைநகர் நகர மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story