50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராமமக்கள்
திருப்பத்தூர் அருகே வெளிநாட்டு பறவைகளுக்காக 50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே வெளிநாட்டு பறவைகளுக்காக 50 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
வெளிநாட்டு பறவைகள்
திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு 38.426 எக்டேர். இதில் பெரிய கொள்ளுக்குடி கண்மாய் 13.66 எக்டேரிலும், சின்னக்கொள்ளுக்குடி கண்மாய் 6.351 எக்டேரிலும், வேட்டங்குடி கண்மாய் 16.415 எக்டேர் ஆகிய மூன்று கண்மாய்களை உள்ளடக்கியது இச்சரணாலயம்.
இதில் தற்போது சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன. இக்கண்மாய்க்கு செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வரும் பறவைகள் இக்கண்மாயில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்.
வனத்துறை பாராட்டு
இந்த பறவைகள் மீது கொண்டுள்ள அன்பாலும், அக்கறையாலும், தங்களது கிராமத்திற்கு வந்த விருந்தினர்கள் என்ற முறையிலும் கடந்த 50 ஆண்டுகளாக தீபாவளிக்கோ அல்லது அக்கிராமத்தில் நடைபெறும் திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் கூட வெடி வெடிப்பதில்லை இந்த கிராம மக்கள். இக்கிராமத்தினர் ஒற்றுமையாக இக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைமுறை தலைமுறையாக பறவைகளுக்காக வெடி இல்லாத தீபாவளியினை கொண்டாடி வரும் கொள்ளுக்குடிபட்டி மற்றும் வேட்டங்குடிபட்டி கிராமங்களில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு மாவட்ட வன அலுவலர் பிரபா முயற்சியினால் வனத்துறை சார்பாக இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் வனசரக அலுவலர் சதாசிவம், வனவர்கள் திருப்பதிராஜா, உதயக்குமார், பிரகாஷ், வனக்காப்பாளர்கள் அருள் ஆரோக்கிய பவுல், வீரையா, செல்வம், ஞானசேனரன், வனக்காவலர்கள் வாசுகி, சின்னப்பன், வீரணன், வேட்டை தடுப்பு காவலர்கள் ரதிக்குமார், இருதயராஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.