வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x

வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி கல் குவாரியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம் சூரியநகரம் ஊராட்சியில் அரசு கல் குவாரி குத்தகையை 5 வருடத்திற்கு தனியார் ஒருவர் எடுத்துள்ளார். கடந்த 2 மாதங்களாக இந்த கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை எல்லாம் பள்ளி கிராம மக்கள் அரசு அனுமதி வழங்கிய அளவைவிட கற்கள் தோண்டப்படுவதாகவும், கல்குவாரியில் சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்படுவதால் கல்குவாரிக்கு அருகில் உள்ள வீடுகளில் அதிர்வு மற்றும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி

கல்குவாரியில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மேலும் கல்குவாரியில் கற்களை ஏற்றிக்கொண்டிருந்த 8 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரியில் வெடிகள் வைப்பதால் எல்லாம் பள்ளி கிராமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். போலீசார் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, கல்குவாரியில் விரைவில் ஆய்வு நடத்தப்படும். அதுவரை தற்காலிகமாக கல்குவாரி செயல்படாது என உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் கல்குவாரியில் இருந்து கலைந்து சென்றனர்.


Next Story