விரிசல் அடைந்த சுவர்கள்... பெயர்ந்து விழும் பூச்சுகள்
விரிசல் அடைந்த சுவர்கள்... பெயர்ந்து விழும் பூச்சுகள்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெகமம் பேரூராட்சி கிழக்கு பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதன் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்படவில்லை.
இதன் காரணமாக சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இது தவிர சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் அலுவலகத்துக்குள் ஒழுகி வருகிறது. இதனால் ஆவணங்களை பாதுகாக்க முடியவில்லை. அங்குள்ள பொருட்கள் கூட மழைநீரில் நனைந்து வீணாகி வருகிறது. மேலும் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
இதை கருத்தில் கொண்டு தற்போது தாராபுரம் சாலையில் உள்ள வருவாய் அலுவலக கட்டிடத்தில், கிராம நிர்வாக அலுவலகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் பழைய அலுவலகம் பயன்படாமல் வீணாகி வருகிறது. எனவே பரிதாப நிலையில் உள்ள அந்த அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய கட்டிம் கட்டவோ அல்லது பராமரிப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. மேலும் கட்டிடம் மிகவும் பாழடைந்து உள்ளது. அங்கு சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால் அங்கு செல்லவே அச்சப்படும் நிலை உள்ளது.
மழைநீர் உள்ளே கசிவதால் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்கள் மட்டுமின்றி மேசை, நாற்காலி போன்ற தளவாட பொருட்களும் சேதம் அடைந்து வருகின்றன.
இதனால் கிராம நிர்வாக அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கும் இடவசதி இல்லை. எனவே பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி மீண்டும் அதே இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.