சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்; சென்னை மாநகராட்சியில் ரூ.5.17 லட்சம் அபராதம் வசூல் - மேயர் பிரியா தகவல்
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்படுவதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து தனது தாயுடன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை, சாலையில் சென்ற மாடு ஒன்று முட்டித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மாட்டின் உரிமையாளரான அரும்பாக்கத்தைச் சேர்ந்த விவேக் (26) மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை தாக்கிய மாட்டை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டு சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சென்னை மாநகராட்சியில் மாடு பிரச்சினை பெரிதாக உள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது அது ரூ.3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 2,800 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.5.17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அரும்பாக்கத்தில் நடந்தது எதிர்பாராத சம்பவம். சிறுமியை தாக்கிய மாட்டைப் பிடித்து, அதற்கு ரேபீஸ் நோய் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்யப்பட உள்ளது. அந்த மாட்டிற்கு ரேபீஸ் பாதிப்பு இருந்தால், சிறுமிக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சியில் மாடுகள் வளர்க்க வேண்டுமெனில், அதற்கு குறிப்பிட்ட பரப்பளவில் நிலம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மாடுகள் வளர்க்க வேண்டும். சாலையில் மாடுகளை விடக் கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம். மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் இது குறித்து தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.