151-வது பிறந்தநாள்: வ.உ.சிதம்பரனார் படத்துக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை:
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்துக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து, வ.உ.சிதம்பரனாரின் பேத்தி மரகத வள்ளி ரங்கநாதன், பேரன் சி.வி.சிதம்பரம் மற்றும் உறவினர்களை, ஆர்.என்.ரவி பாராட்டினார். இதையடுத்து அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்தியாவின் சுதந்திர தினத்துக்கு வ.உ.சிதம்பரனார் ஆற்றிய பங்களிப்பு குறித்து குறும் படம் திரையிடப்பட்டது.
இதையொட்டி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேசும்போது, நமது சுதந்திர போராட்ட வீரர்கள் சந்தித்த துயரங்கள், துன்பங்களை வருங்கால சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேரில் உள்ள செல்லூலார் சிறைச்சாலைக்கு மாணவர்களை அழைத்துச்செல்லவேண்டும் என்றார்.
முன்னதாக ஆசிரியர் தினத்தையொட்டி, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்துக்கு, ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வுகளில், கவர்னரின் மனைவி லட்சுமி, கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தின் செயலாளர் எஸ்.அய்யப்பன், துணை வேந்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.