தாலியை கழற்றிவைத்து மனைவி துன்புறுத்தல் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு


தாலியை கழற்றிவைத்து மனைவி துன்புறுத்தல் மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு
x

தாலியை கழற்றிவைத்து மனைவி செய்த துன்புறுத்தலால் பேராசிரியருக்கு விவாகரத்து வழங்கி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கும், அரசு ஆசிரியையான அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி பேராசிரியரிடம் மனைவி அடிக்கடி தகராறு செய்துள்ளார். அதையடுத்து, மனரீதியாக துன்புறுத்தி வரும் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு பேராசிரியர் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் அந்த வழக்கை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.

தாலியை கழற்றி வைத்தார்

இந்த வழக்கை நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, எஸ்.சவுந்தர் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்த வழக்கில் மனுதாரர் பணிபுரியும் இடத்துக்குச் சென்று அவரது மனைவி தகராறு செய்துள்ளார். அப்போது கணவரைப்பற்றி அவதூறு பரப்பி அவருக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததும் தாலியை கழுத்தில் இருந்து கழற்றி வைத்துள்ளார். பொதுவாக கணவர் இறந்தபிறகே தாலியைக் கழற்றுவது வழக்கம்.

விவாகரத்து

ஆனால், கணவர் உயிருடன் இருக்கும்போது, விவாகரத்து வழங்காதபோது தாலியைக் கழற்றுவது என்பது இந்து திருமண சட்டத்தின்படி சம்பிரதாயத்தை மீறிய செயல் ஆகும்.

தாலிதான் திருமணத்தின் மிகப்பெரிய அங்கமாக விளங்குகிறது. அப்படி இருக்கும்போது, தாலியை கழற்றிவைத்து மனுதாரருக்கு அவருடைய மனைவி மனரீதியாக மிகப்பெரிய துன்பத்தை அளித்துள்ளார். எனவே கணவருக்கு விவாகரத்து அளிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story