ராஜினாமா செய்து விட்டால் பணி பயன்களை கணக்கில் கொள்ள முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடக் வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய தியாகராஜன், மாலதி ஆகியோர் தங்கள் பணியை ராஜினாமா செய்துவிட்டு, அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக சேர்ந்தனர்.
இதையடுத்து, தங்களது முந்தைய பணிப்பயன்களை, கணக்கில் எடுத்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடக் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் வக்கீல் ஆர்.நீலகண்டன், "தமிழ்நாடு அரசு மற்றும் துணைப்பணிகளுக்கான விதிகளின்படி, அரசுப் பணியாளர் ஒருவர், தான் பணிபுரிந்த பணியிலிருந்து தானே விலகினால் அந்த பணிக் காலத்தை விட்டுக்கொடுத்து விட்டதாகத் தான் எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின்படியும், பணியிலிருந்து தானே விலகினால் அந்த பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று வாதிட்டார்.
இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, ராஜினாமா செய்து விட்டால், அந்த பணியின் பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.