ராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 10 April 2024 11:10 PM IST (Updated: 10 April 2024 11:11 PM IST)
t-max-icont-min-icon

11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.

சென்னை,

ராம நவமியை முன்னிட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை கேரளா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வரை யாத்திரை செல்ல அனுமதிக்கோரி சென்னை ஐகோர்ட்டில், ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், "நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரிக்கு யாத்திரை செல்ல அனுமதி அளிக்க கோரிய மனு கொடுத்தோம். ஆனால், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, "கடந்த 2 ஆண்டுகளாக இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போது, ஒரு மாவட்டத்தில் மட்டுமே யாத்திரை நடத்திய மனுதாரர் அமைப்பு, தற்போது தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அனுமதி கேட்டுகிறது" என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, நீதிபதி, "11 மாவட்டங்களில் யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது" என்று கூறினார். மனுதாரர் தரப்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமாவது யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, "கன்னியாக்குமரியில் யாத்திரை செல்ல அனுமதிக்கோரி மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை அரசு பரீசிலித்து முடிவு எடுக்கவேண்டும்" என்று உத்தரவிட்டார்.


Next Story