ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்ல அதிகாரிகள் நிபந்தனையுடன் அனுமதி


ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்ல அதிகாரிகள் நிபந்தனையுடன் அனுமதி
x

ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, நெல்லையில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதற்கு நிபந்தனைகளுடன் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இரவில் அங்கு பா.ஜனதா-இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி

ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து, நெல்லையில் விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதற்கு நிபந்தனைகளுடன் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இரவில் அங்கு பா.ஜனதா-இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

விநாயகர் சிலைகள்

ெநல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருந்தனர். இந்து அமைப்பினரும் அந்த சிலைகளை வாங்குவதற்காக முன்பணம் செலுத்தி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் விநாயகர் சிலைகளை ரசாயன பொருள் கொண்டு தயாரித்திருப்பதால் சிலையை நீர் நிலைகளில் கரைக்கும்போது மாசுபாடு ஏற்படும் என்று கூறி அந்த விநாயகர் சிலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

மேலும் குடோனில் இருந்து விநாயகர் சிலைகளை வெளியே எடுத்து செல்ல முடியாதபடி வருவாய்த்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் குடோனை சுற்றிலும் இரும்பு தகரத்தை கொண்டு அடைத்து சீல் வைத்தனர்.

பா.ஜனதாவினர் போராட்டம்

இந்நிலையில் அந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, நேற்று பா.ஜனதாவினர் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ், வேல்ஆறுமுகம், முத்துபலவேசம், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன் வெங்கடாஜலபதி, மாரியம்மாள், மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் அன்புராஜ், முன்னாள் மேயர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கையில் சிறிய அளவிலான விநாயகர் சிலையுடன் திரளானோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். உடனே அவர்களிடம், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கலைந்து செல்ல மாட்டோம்

அப்போது, விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு 330 சிலைகள் தயாரிக்கப்பட்டு, அதற்கான முன்பணத்தை கொடுத்து விட்டோம். எனவே, இந்த ஆண்டு மட்டும் ஏற்கனவே தயாரித்த விநாயகர் சிலைகளை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கரைக்காவிட்டாலும் பரவாயில்லை. வழிபாடு செய்து ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்கு மட்டும் அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று அங்கேயே அமர்ந்து இருந்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

இதற்கிடையே, தயாரான விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு எடுத்து செல்ல அனுமதி கேட்டு இந்து முன்னணி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிபந்தனைகளுடன் விநாயகர் சிலைகளை எடுத்து செல்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று இரவில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக எடுத்துச்செல்வதற்கு கிருபா நகருக்கு இந்து முன்னணியினர் சென்றனர். ஆனால் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்தனர்.

வாக்குவாதம்

அப்போது இந்து முன்னணி வக்கீல் குற்றாலநாதன் மற்றும் நிர்வாகிகள், ஐகோர்ட்டு உத்தரவை காண்பித்து அதன்படி விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலையை அவர்கள் வெளியே எடுத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிபந்தனையுடன் அனுமதி

இதையடுத்து பா.ஜனதா நிர்வாகிகள் முத்துபலவேசம், முருகதாஸ், பாலாஜி கிருஷ்ணசாமி, வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன், செயலாளர் மணிகண்டன் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் அங்கு திரண்டு வந்தனர். விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

அவர்களிடம், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா, பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி கடும் நிபந்தனைகளுடன் விநாயகர் சிலைகளை எடுத்து செல்ல அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

தொடர்ந்து விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணியில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக நிலவிய பரபரப்பு நேற்று இரவு 11 மணிக்கு முடிவுக்கு வந்தது.


Next Story