போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகையை அதிகரித்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை,
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை அதிகரித்து கடந்த அக்டோபர் 19-ந்தேதி தமிழ்நாடு அரசு, அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் போடாமல் ஓட்டினால் ரூ.ஆயிரம் என்று அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரியும் மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-
விபத்துக்கு காரணம்
போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை தமிழ்நாடு அரசு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், ஏழை, எளிய பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகர்ப்புற மற்றும் நெடுஞ்சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், நடுவழியில் பழுதாகி நிற்கும் வாகனங்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், கவனச்சிதறல் போன்ற பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் நடக்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்யாமல் வாகன ஓட்டிகளுக்கு அதிக தொகையை அபராதமாக விதிப்பது ஏற்புடையதல்ல. இதன்காரணமாக போக்குவரத்து போலீசார் அப்பாவி பொதுமக்களைத் தான் அதிகமாக துன்புறுத்துகின்றனர்.
தடை வேண்டும்
அரசியல்வாதிகளையோ அல்லது செல்வாக்கு மிக்க வசதி படைத்தவர்களையோ, அதிகாரிகளையோ போலீசார் எந்த இடத்திலும் நிறுத்துவதில்லை. அபராதத்தொகையை உயர்த்தும் முன்பாக போக்குவரத்து நெரிசல் இல்லாத தரமான சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்.
இந்த வசதிகளை செய்து கொடுக்கும்வரை அபராதத்தொகையை உயர்த்தி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.
அவகாசம்
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதம் செய்ய அவகாசம் கேட்டதால், விசாரணையை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.