எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் இன்று வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில், 2022 ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்பட 4 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். 2022 ஜுலை 17ம் தேதி எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச்செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சட்டசபையில் உரிய அங்கீகாரம் வழங்கவேண்டுமென சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும், நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டசபையில் இருக்கையும் மாற்றி அமைக்க முறையிட்டும் சபாநாயகர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக அங்கீகரித்து, உரிய இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிடக்கோரி தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு அடுத்தமாதம் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story