நாமக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் நீதிமன்றத்தில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டம் முழுவதும் மக்கள் நீதிமன்றத்தில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் பாலகுமார், கிருஷ்ணன், சுந்தரையா, ஜெயபிரகாஷ் மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விஜய் கார்த்திக் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.
2,605 வழக்குகளுக்கு தீர்வு
குறிப்பாக பரமத்திவேலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வக்கீல் கணபதி வாதாடி வந்தார். இந்த வழக்கில் அவரது மனைவி அம்சவள்ளி, மகள் மேகலா, மகன் கார்த்திக் ஆகியோருக்கு இழப்பீடாக ரூ.57 லட்சத்து 4 ஆயிரத்து 477 வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதேபோல் விபத்தில் காலில் காயம் அடைந்த தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த அன்னகுமார் என்பவருக்கு ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தை பொறுத்தவரையில் வென்றவர், தோற்றவர் என வேறுபாடு கிடையாது எனவும், இங்கு வழங்கப்படும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 4,051 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 2,605 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.14 கோடியே 47 லட்சத்து 40 ஆயிரத்து 842 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.