தனியார் 'டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் ரூ.2.31 கோடி கையாடல்; மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது
தனியார் ‘டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்தில் ரூ.2.31 கோடி கையாடல் மோசடிக்கு உடந்தையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஜாபர் இப்ராகீம் என்பவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். 'பாஸ்டேக் ரீசார்ஜ்' டீலராகவும் உள்ளார். இவருடைய நிறுவனத்தில் மேற்கு மாம்பலம் நாகாத்தாமன் கோவில் தெருவை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடைய நிறுவனத்தில் போலி கணக்கு காட்டி 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் ரூ.2.31 கோடி பணத்தை கையாடல் செய்துவிட்டார் என்று ஜாபர் இப்ராகீம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் கீர்த்தனா கையாடல் செய்த பணத்தை தனது கணவர் மகேஷ், உறவினர்கள் சிலரது வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் கீர்த்தனா, அவரது கணவர் மகேஷ் மற்றும் உறவினர்கள் சிலர் தலைமறைவாகினர். அவர்களை இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் மகேஷ் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.