ஓடும் பஸ்சில் தம்பதி ரகளை; டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்


ஓடும் பஸ்சில் தம்பதி ரகளை; டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
x

திருச்சியில் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்ததால் ஓடும் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட தம்பதி டிரைவர், கண்டக்டரை தாக்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சியில் படிக்கட்டில் பயணித்ததை கண்டித்ததால் ஓடும் பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட தம்பதி டிரைவர், கண்டக்டரை தாக்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

படிக்கட்டில் பயணம்

திருச்சி அரசு போக்குவரத்து கழக மலைக்கோட்டை பணிமனையில் டிரைவராக குமரவேல் (வயது 44) என்பவரும், கண்டக்டராக காமராஜ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சஞ்சீவி நகரில் உள்ள முத்துமணிடவுன்-சத்திரம் பஸ் நிலையம் வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் இருவரும் பணியில் இருந்தனர். பஸ் மத்தியசேமிப்பு கிடங்கு நிறுத்தத்தில் நின்றபோது, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியை சேர்ந்த இளங்கோவன் (32), அவரது மனைவி முத்துலட்சுமி (40) ஆகியோர் ஏறியுள்ளனர். மதுபோதையில் இருந்த இளங்கோவன் படிக்கட்டில் இருந்து பயணம் செய்ததாக தெரிகிறது. இதைக்கண்ட கண்டக்டர் காமராஜ் அவரை பஸ்சுக்குள் வருமாறும், டிக்கெட் எடுக்குமாறும் கூறியுள்ளார். இதைகண்டுகொள்ளாத இளங்கோவன் பஸ்சை வேகமாக ஓட்டுமாறு கூறி தகராறில் ஈடுபட்டார்.

தாக்குதல்

மேலும் தகாத வார்த்தையால் கண்டக்டரை திட்டி உள்ளார். தொடர்ந்து இளங்கோவன், முத்துலட்சுமி ஆகியோர் சேர்ந்து கண்டக்டர் காமராஜை தாக்கினர். ஒரு கட்டத்தில் முத்துலட்சுமி காமராஜின் கையை கடித்தார். அதுமட்டுமின்றி தம்பதி இருவரும் பஸ்சில் ரகளையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டிரைவர் குமரவேல் பஸ்சை நடுவழியில் நிறுத்தி விட்டு கண்டக்டரை தாக்கியது குறித்து கேட்டுள்ளார். தொடர்ந்து அவரையும் தம்பதி தாக்கினர். பின்னர் பயணிகள் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

இந்த சம்பவத்தில் டிரைவர் குமரவேலுக்கு இடது கண், கையில் காயம் ஏற்பட்டது. கண்டக்டர் காமராஜிக்கு உதடு, கை மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இது குறித்து டிரைவர் குமரவேல் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகளை செய்த தம்பதியை கைது செய்தனர்.


Next Story