கலெக்டரின் கார் முன்பு தம்பதி தர்ணா போராட்டம்


கலெக்டரின் கார் முன்பு தம்பதி தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2023 8:03 PM GMT (Updated: 24 Jun 2023 10:26 AM GMT)

சேலத்தில் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக்கோரி கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம்

சேலத்தில் ஓய்வூதிய பணப்பலன்களை வழங்கக்கோரி கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்ணா

சேலம் கன்னங்குறிச்சி அன்னை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). இவருடைய மனைவி செல்வமேரி (63). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தவுடன் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனிடையே அங்கு வந்த கலெக்டர் கார்மேகம், தர்ணாவில் ஈடுபட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தினார். பின்னர் ராஜேந்திரன், கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார்.

பணப்பலன்கள்

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஏற்காடு லேம்ப் கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். கடந்த 2000-ம் ஆண்டு மருத்துவ விடுப்பில் இருந்த என்னை கூட்டுறவு சங்க நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தது. இதுதொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு எனக்கான பணபலன்களை வழங்க அறிவுறுத்தியது. ஆனால் சேலம் சரக துணைப்பதிவாளர் காலதாமதம் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக அவரை பலமுறை சந்தித்து முறையிட்டும் இதுவரை ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, நானும், மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

கலெக்டரிடம் மனு

அவரது மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கார்மேகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேலத்தில் கூட்டுறவுத்துறையில் பணப்பலன்களை வழங்கக்கோரி கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தம்பதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story