பூந்தமல்லியில் மின்சார மோட்டார்சைக்கிள் வினியோக உரிமை தருவதாக ரூ.17 லட்சம் மோசடி - தம்பதி கைது
மின்சார மோட்டார்சைக்கிள் வினியோக உரிமை தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி, கார்டுவெல் காலனியை சேர்ந்தவர் நிமேஷ் எட்வின் (வயது 43). இவர், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பூந்தமல்லி முனி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த வெங்கடேஷ்-பாண்டிலட்சுமி தம்பதியினர் கரையான்சாவடியில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார மோட்டார்சைக்கிள் விற்பனைக்கான தூத்துக்குடி மாவட்டத்துக்கான வினியோக உரிமை கொடுப்பதாக கூறினர்.
இதற்காக ரூ.25 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி மின்சார மோட்டார்சைக்கிள் வினியோக உரிமை தரவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தில் ரூ.8 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர்.
மீதம் உள்ள ரூ.17 லட்சத்தை திருப்பி கேட்டபோது, கணவன்-மனைவி இருவரும் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர். நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும், அவருடைய மனைவி பாண்டிலட்சுமியும் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பவம் தொடர்பாக நேற்று வெங்கடேஷ் மற்றும் அவருடைய மனைவி பாண்டிலட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.