சென்னையில் பரவும் 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் - போலீசார், வங்கி அதிகாரிகள் விசாரணை
தரமணியில் 100 ரூபாய் கள்ளநோட்டுக்களை தயாரித்து சிலர் புழக்கத்தில் விட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,
சென்னையில் சர்வ சாதாரணமாக 100 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கள்ளநோட்டு புழக்கம் குறித்து காவல்துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் அண்மையில் 3 சிறார்கள் சேர்ந்து தனியார் போட்டோ ஸ்டூடியோவில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை பிரிண்ட் செய்து அதனை புழக்கத்தில் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை தரமணியில் மிக கச்சிதமாக 100 ரூபாய் கள்ளநோட்டுக்களை தயாரித்து சிலர் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
உண்மையான ரூபாய் நோட்டில் வலது பக்கம் இருக்கும் வெள்ளைப் பக்கத்தில் தெரியக் கூடிய காந்தியின் உருவப்படம் இந்த கள்ளநோட்டுக்களில் தென்படவில்லை. மேலும் 100 ரூபாய் நோட்டில் நடுப்பகுதியில் மின்னக்கூடிய கோடு போன்ற பகுதி, கள்ளநோட்டில் மின்னவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.