வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
விராலிமலை ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் காமுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை தலைவர் லதா, ஒன்றிய ஆணையர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:- விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதற்கு டீசல் மற்றும் மருந்து வாங்குவதற்கு போதிய நிதி இல்லை என்று ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதனால் விராலிமலை சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. எனவே டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பூதகுடி ஊராட்சியில் மின் கட்டணம் செலுத்தாததால் அங்கன்வாடிகளுக்கான மின் இணைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்து விட்டனர். எனவே குழந்தைகளின் நலன் கருதி ஊராட்சி நிர்வாகத்தினர் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ராஜாளிபட்டி ஊராட்சி பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வருகிறது. அங்கு சீரான முறையில் காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து, ஒன்றிய ஆணையர் சாமிநாதன் உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.