பூத்து குலுங்கும் பருத்தி செடிகள்
திருமருகல் வட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பருத்தி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமருகல் வட்டார பகுதிகளில் பூத்து குலுங்கும் பருத்தி செடிகளால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து கோடை சாகுபடியான உளுந்து, பயறு சாகுபடி செய்து இருந்தனர்.
தற்போது உளுந்து, பயறு அறுவடை பணிகளும் முடிந்து விட்டது. இந்த நிலையில் திருமருகல் ஒன்றிய பகுதியான திருமருகல், சியாத்தமங்கை, ஆலத்தூர், சேஷமூலை, இடையாத்தங்குடி, திருப்புகலூர், விற்குடி, வாழ்குடி, குத்தாலம், நரிமணம், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய்குப்பை, மேலப்பூதனூர், திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
அறுவடை
பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆற்று பாசனத்தை பெரும்பாலும் நம்பியுள்ள மேற்கண்ட பகுதி விவசாயிகள், ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால், நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள் மூலம் பருத்தி சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பருத்தி முளைத்து 50 நாட்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். 100 நாட்களில் பருத்தியை அறுவடை செய்ய தொடங்கலாம். பணப்பயிரான பருத்திக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
பூத்து குலுங்கும் பருத்தி
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை விட்டு, விட்டு பெய்ததால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கியது. தற்போது மழை நின்று, வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக பருத்தி வயல்களில் இருந்து தண்ணீர் வடிந்து பழைய நிலை திரும்பி உள்ளது.
சமீபத்தில் பெய்த மழை பருத்தி செடியில் கூடுதல் மகசூல் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். திருமருகல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பருத்தி செடிகள் பூத்து குலுங்குவதையும் பார்க்க முடிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.