திருமருகல் பகுதியில் விடிய, விடிய மழை:பருத்தி வயலில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை
திருமருகல் பகுதியில் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக பருத்தி வயலில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருமருகல் பகுதியில் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக பருத்தி வயலில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோடை மழை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வெயிலால் மதிய நேரத்தில் மக்கள் வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
நாகை மாவட்ட பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதும் வெயில் மேலும் அதிகரிக்கும் என மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நாகை மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
திருமருகல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இந்த மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, கட்டுமாவடி, அம்பல், பொறக்குடி, எரவாஞ்சேரி, மருங்கூர், நெய்க்குப்பை, மேலப்பூதனூர், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், ஏனங்குடி, போலகம், சேஷமூலை உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்தது.
இந்த மழை நேற்று அதிகாலை வரையிலும் நீடித்தது. விடிய, விடிய பெய்த மழையால் திருமருகல், பண்டாரவாடை, இடையாத்தங்குடி, ஆலத்தூர், திருப்புகலூர், விற்குடி, வாழ்குடி ஆகிய பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் பாதிப்பு ஏற்படுமோ என வேதனை அடைந்துள்ளனர்.
மின் வெட்டு
தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திட்டச்சேரி பகுதியில் மழையின் காரணமாக இரவு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.