பன்றிகளை சாலையில் திரியவிடுபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்
திருத்துறைப்பூண்டியில் பன்றிகளை சாலையில் திரியவிடுபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டியில் பன்றிகளை சாலையில் திரியவிடுபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
நகரசபை கூட்டம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகரசபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ், துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமனக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரசபை தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ரஞ்சனி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாலம் சேதம்
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
மின்னல் கொடி பாலகிருஷ்ணன் (அ.தி.மு.க.):-
புதிய மின் இணைப்புகள் வழங்கி, தெருவிளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமலோகேஸ்வரி ரகுராமன் (மா.கம்யூ.):-
பைபாஸ் ரோட்டில் இருந்து உள்பகுதிக்கு செல்லும் சாலையில் பாலம் சேதம் அடைந்து உள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.
உமா இளஞ்செழியன் (தி.மு.க.):-
அரியலூர் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும்.
ராஜேஸ்வரி பசுபதி (தி.மு.க.):-
ஆதி திராவிடர் பள்ளிக்கு அருகில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
ஆக்கிரமிப்புகள்
தாஜுதீன் (சுயேச்சை):-
சாக்கடையில் இருந்து அள்ளப்படும் மண் மற்றும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
சரவணன் (சுயேச்சை):-
அண்ணாநகர் பகுதியில் சாலை அமைத்து தர வேண்டும்.
ராஜேந்திரன் (காங்.):- ஆஸ்பத்திரி தெருவுக்கு செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
எழிலரசன் (காங்.):-
நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் நகராட்சியின் பொது நிதியை செலவு செய்ய ஆர்.டி.எம்.ஏ. அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என ஆணையர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நிதியை நகரசபை உறுப்பினர்கள் தெரிவிக்கும் குறைகளை சரி செய்ய பயன்படுத்த வேண்டும்.
போலீசில் புகார்
நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன்:-
சாலையில் பன்றிகளை சுற்றித்திரிய விடுபவர்கள் மீது போலீசில் ஆணையர் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை போன்ற மாநகராட்சிகளில் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அதே போல திருத்துறைப்பூண்டியிலும் மாடுகளை பிடித்து ஏலத்தில் விட வேண்டும்.
நகரசபை துணைத்தலைவர் ஜெயபிரகாஷ்:- பன்றிகள், மாடுகளை பிடிக்க வேண்டும். பிடிக்கப்பட்ட மாடுகளை ஏலம் விட வேண்டும்.
சாலை வசதிகள்
நகரசபை தலைவர் கவிதா பாண்டியன்:- அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். பெரும்பாலான உறுப்பினர்கள் சாலை வசதிகள் தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் மயானம் தற்போது சரி செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. அது இனிமேல் தொடர்ந்து இயங்கும். நகராட்சி மூலம் குடிநீர், சாலை வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு விவாதம் நடந்தது.