ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க புதிய முயற்சி- பிரபலங்களின் புகைப்படங்களுடன் 'செல்பி' எடுக்கும் வசதி


ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க புதிய முயற்சி- பிரபலங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுக்கும் வசதி
x

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க பிரபலங்களின் புகைப்படங்கள் அமைத்து பொதுமக்கள் ‘செல்பி’ எடுக்கும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் பொது இடங்களில் குப்பை சேருவதை தடுக்க பிரபலங்களின் புகைப்படங்கள் அமைத்து பொதுமக்கள் 'செல்பி' எடுக்கும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.

குப்பை பிரச்சினை

ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சினையாகும். 60 வார்டுகளிலும் இந்த பிரச்சினை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது.

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும், வீதிகளின் ஓரத்திலும், குடியிருப்புகளை ஒட்டிய காலி இடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

காலி இடங்களில்...

ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஈரோடு மாநகராட்சியை குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வீதிகளின் ஓரத்தில் வழக்கமாக குப்பைகள் போடும் இடங்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை செய்ததுடன், மகளிர் குழுக்கள் மூலம் வண்ணக்கோலங்கள் போடப்பட்டன.

இது ஓரளவுக்கு வெற்றியை கொடுத்தது. வீதிகளில் குப்பைகள் குவித்து போடுவது குறைந்தது. ஆனால், குடியிருப்புகளை ஒட்டி உள்ள காலி இடங்கள், நீர் நிலைகளில் குப்பை கொட்டுவது அதிகரித்து இருக்கிறது.

பிரபலங்களின் படங்கள்

இந்தநிலையில் குப்பை சேருவதை தடுக்க புதிய முயற்சியை ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் எடுத்து உள்ளது. அதன்படி எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகங்களுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல உதவி ஆணையாளர் சண்முகவடிவு மேற்பார்வையில், சுகாதார அதிகாரி ஜாகீர் உசேன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிகம் குப்பைகளை போட்டு விட்டு செல்லும் பகுதிகளில் பிரபலங்களின் வண்ண புகைப்படங்களுடன் எனது குப்பை எனதுபொறுப்பு என்ற வாசகத்துடன் பிளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் டோனி, நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்களின் புகைப்படங்களும், அதன் அருகில் நின்று எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகத்துடன் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனை ஆர்வமாக பார்க்கும் பொதுமக்களும் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ச்சியாக செல்கிறார்கள்.

இதுபற்றி சுகாதார அதிகாரி ஜாகீர் உசேன் கூறும்போது, 'பொதுமக்கள் மத்தியில் குப்பை சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் உதவியாக உள்ளது' என்றார்.


Next Story