ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டு
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்தில் குப்பை மேலாண்மையில் சிறந்து விளங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குப்பை
ஈரோடு மாநகராட்சி குப்பை தொட்டி இல்லாத மாநகரம் என்ற இலக்கை அடையும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல பகுதிகளில் குப்பை சேருவதையும், பொது இடங்களில் சிலர் குப்பைகளை வீசி செல்வதையும் தடுக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
பொதுஇடங்களில் குப்பையை வீசுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு பலகைகள் வைத்தால், அந்த எச்சரிக்கை பலகையை சுற்றியே குப்பையை வீசி சவால் விடுவதும் தொடர்ந்து வருகிறது.
குடியிருப்புவாசிகளுக்கு பாராட்டு
எனவே ஈரோடு மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் சற்று வித்தியாசமாக ஒரு நடைமுறையை தொடங்கி உள்ளனர். குப்பை மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குப்பை மேலாண்மை நடவடிக்கைகளில் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பவர்களுக்கு பாராட்டு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டல சுகாதார ஆய்வாளர் ஜாகிர்உசேன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஆய்வு நடத்தினார்கள். அப்போது 44-வது வார்டில் அக்ரகாரம் வீதியில் உள்ள நியூ ராஜ்ஸ்ரீ அபார்ட்மென்ட்டில் உள்ள குடியிருப்புவாசிகள் தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் போது குப்பையை தரம்பிரித்து வழங்கி வருவதை பாராட்டும் வகையில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
பிரசாரம்
4-வது மண்டல தலைவர் குறிஞ்சி தண்டபாணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் மேனகா நடேசன் முன்னிலை வகித்தார். குடியிருப்பு வாசிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட அபார்ட்மென்ட் வாசிகளை பாராட்டும் பதாகையும் தொங்க விடப்பட்டது. இதுபோல் 38-வது வார்டில் உள்ள பொதுமக்களிடமும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் கவுன்சிலர் மங்கேஸ்வரி புனிதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சுகாதார ஆய்வாளர் ஜாகிர்உசேன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் சிறப்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், செயற்பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அதிகாரி டாக்டர் பிரகாஷ், மண்டல உதவி ஆணையாளர் சண்முக வடிவு ஆகியோரின் வழிகாட்டுதலின் இந்த நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பையை பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். வீதிகளிலோ, பொது இடங்களிலோ குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.