மாவட்டத்தில், நாளை 1,240 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்


மாவட்டத்தில், நாளை  1,240 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1,240 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,240 மையங்களில் மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.

முன்னுரிமை

இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

மேலும் முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்தி கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.

30-ந் தேதி வரை இலவசம்

முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 18 முதல் 59 வயதிற்குபட்ட நபர்கள் 182 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவ முகாம்களில் வருகிற 30-ந் தேதி வரை இலவசமாக செலுத்தி கொள்ளலாம்.

மேலும் வருகிற 30-ந் தேதிக்கு பின் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள இயலாது. இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story