மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..!
வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
2 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது 21 பேர் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் லேசான அறிகுறிகளுடன் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. பொது இடங்களில் 6 அடி தூரம் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். மேலும் பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இறப்பு உள்ளிட்ட துக்க நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக் கூடாது.
மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைவரும் கட்டாயமாக முதல் மற்றும் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். முன்களப்பணியாளர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.