உழவர் சந்தைகளில் கொத்தமல்லி விலை உயர்வு
சேலம் உழவர் சந்தைகளில் கொத்தமல்லி விலை உயர்வு
சேலம் உழவர் சந்தைகளில் நாட்டு கொத்தமல்லி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கட்டு ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விளைச்சல் பாதிப்பு
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, தாதகாப்பட்டி ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நாட்டு கொத்தமல்லி விளைச்சல் கிடையாது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் இருந்து தான் கொத்தமல்லி விற்பனைக்காக சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கும், தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு வரப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நாட்டு கொத்தமல்லி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொத்தமல்லி விலை உயர்வு
இதன் காரணமாக வரத்து குறைவால் உழவர் சந்தைகளில் கொத்தமல்லி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டு நாட்டு கொத்தமல்லி ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவால் ரூ.15 அதிகரித்து ஒரு கட்டு நாட்டு கொத்தமல்லி ரூ.45 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உழவர் சந்தைகளில் நாட்டு கொத்தமல்லிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சூரமங்கலம் உழவர் சந்தை விவசாயிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமே கொத்தமல்லி விளைச்சல் அதிகமாக இருக்கும். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் இருந்து தான் சேலத்தில் உள்ள சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வருகிறது. மழை பெய்து விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே கொத்தமல்லி விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது, என்றனர்.