பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது - ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது - ஆவடி போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x

பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது என ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை

பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் திறந்து வைத்தார்.

போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவதற்கும், வாகனங்களை கண்காணிப்பதற்கும் இந்த புறக்காவல் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், அங்கிருந்த போலீசார் மத்தியில் பேசியதாவது:-

பணி நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்தக்கூடாது. பணி நேரம் முடிந்த பிறகுதான் செல்போனை பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் யாரும் தேவை இல்லாமல் கருத்து பதிவிட வேண்டாம். அரசாங்கம் தான் சம்பளம் கொடுக்கிறது. எனவே அரசாங்க வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும். பணி நேரத்தில் வேலையை மட்டும் செய்ய வேண்டும். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மதுவிலக்கு போலீசார் என 3 பிரிவையும் இணைத்து புறக்காவல் நிலையங்கள் அமைக்க உள்ளது. இதனால் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருவது சோதனை செய்யப்பட்டு முற்றிலும் தடுக்கப்படும். செயல்படாத புறக்காவல் நிலையங்களையும் விரைந்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் சோழவரம் போலீஸ் நிலைய எல்லையில் ஆட்டந்தாங்கல் பகுதியிலும், திருமுல்லைவாயல் போலீஸ் நிலைய எல்லையில் அயப்பாக்கம் பகுதியிலும் புறக்காவல் நிலையங்களை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்.

இந்த புதிய புறக்காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு மனு ரசீது வழங்கி விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். 24 மணி நேரமும் புறக்காவல் நிலையங்கள் செயல்படும். புறக்காவல் நிலையத்தில் வரவேற்பு பணியில் உள்ள போலீசார், பொது மக்களுக்கு உதவி செய்வார்கள்.


Next Story