ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருட்டு - வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது


ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருட்டு - வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் காப்பர் கம்பிகள் திருடிய வழக்கில் வடமாநில காவலாளிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன் தாமிர கம்பிகள் அதிக அளவில் திருட்டு போவதாக தொழிற்சாலையின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக தொழிற்சாலை காவலாளிகளான திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சுப்ரத் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விபின்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தொழிற்சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை சோதித்தநிலையில், தொழிற்சாலைக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நாகராஜன் மற்றும் மணிகண்டனிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.அதில் வடமாநில காவலாளிகள் உதவியுடன் தண்ணீர் கேன் சப்ளைக்காக வரும் வாகனத்தில் நாகராஜனும், மணிகண்டனும் தாமிர கம்பிகளை திருடி சென்று விற்று பணத்தை பங்கிட்டு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த சுப்ரத் (வயது 27), விபின்குமார் (28), நாகராஜன் (29) மற்றும் மணிகண்டன் (32) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story