செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் அனைத்து துறையினரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, மாநகராட்சி மூலம் நியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் தற்காலிக கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் வீட்டை சுற்றியுள்ள பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பெற்றோர்களுக்கு தெரிவித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.
சுகாதாரத் துறையினருக்கு தகவல்
மேலும் பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா? என அறிந்தும் அவர்கள் விவரங்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவிக்கவும் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து மற்றும் சமூக நலத்துறையினர் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருப்பின், அந்தந்தப் பகுதி சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
மருத்துவத் துறையை பொறுத்தமட்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேரும் காய்ச்சல் கண்டவர்கள் விவரம், சுகாதாரத் துறையினருக்கு தகவல் தரப்பட வேண்டும்
சித்த மருத்துவத்துறை, அனைத்து காய்ச்சல் கண்ட நபர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும்.
மேற்கண்ட துறைகள் அனைத்தும், தொடர்ச்சியான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
நிலவேம்பு குடிநீர்
அதனைத் தொடர்ந்து, மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களுக்கான நிலவேம்பு குடிநீரை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் உதயா கருணாகரன், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி, நகர மன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.