கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்


கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க ஒத்துழைக்க வேண்டும்; விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்
x

கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைக்க விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பிரதான கால்வாய் விரிவாக்குதல், புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக நபார்டு வங்கியின் மூலம் ரூ.709.60 கோடி கடன் பெற்று பணிகள் தொடங்குகின்ற நேரத்தில் விவசாயிகளில் ஒரு சாராரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தன. அதாவது கால்வாயின் தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்துவிட்டால் தண்ணீர் பூமியில் ஊராது. கால்வாயின் அருகில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் சிரமப்படுவார்கள்.

எனவே, தரையில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று ஒரு சாரார் கேட்டுக்கொண்டார்கள். அரசு அந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

கரைகள் மற்றும் கட்டுமானங்களை பொருத்தமட்டில் சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்டவை. கால்வாய்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த காரணத்தால் காலப்போக்கில் அவைகள் சிதைந்து, உடைந்து, பலம் இழந்து போய்விட்டது. அன்று கரையில் வைக்கப்பட்ட மரங்கள் பெருமளவில் வளர்ந்து வேர்கள் மூலம் கரைகள் உடைவதற்கு காரணமாகி விட்டது. மதகுகள் மற்றும் மழைநீர் செல்லும் பாலங்கள் காலப்போக்கில் சிதைந்து போய்விட்டன. இவைகளை எல்லாம் சீரமைத்தால்தான் விவசாயத்துக்கு தண்ணீர் கடைமடை வரை தடையின்றி கிடைக்கும். ஆனால், பிரதான கால்வாயின் இரு புறங்களிலும் இருப்பவர்களுக்கு இதனால் பாதகம் ஏற்பட்டு விடும் என்று சிலர் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை பரப்பி விட்டார்கள்.

மீண்டும் பணி

விவசாயிகள் மத்தியில் ஏற்பட்ட இத்தகைய ஐயத்தை போக்குவதற்காக, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார்கள். அமைச்சர் முத்துசாமியும் பல முறை இந்த பிரச்சினையை பேசித் தீர்ப்பதற்கு அதிக காலம் செலவிட்டார். நானும், இரு தரப்பு விவசாயிகள் மத்தியில் பல முறை பேசி விளக்கி இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு விவசாயிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் உருவாகி இருப்பதை நான் வரவேற்கிறேன்.

இத்தகைய மனப்போக்குதான் விவசாயத்தையே நம்பி இருக்கிற விவசாயிகளின் வாழ்வுக்கு உதவுவதாகும். எனவே, நின்று போயிருக்கிற பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். கால்வாயின் தரையில் எக்காரணம் கொண்டும் கான்கிரீட் தளம் போடக்கூடாது என்றும், சேதம் அடைந்த மதகுகள் மற்றும் குறுக்கு கட்டுமானங்களை சீரமைக்கவும், மிகவும் பலவீனமாக உள்ள கால்வாய் கரை பகுதிகளில் கான்கிரீட் சுவர் அமைக்கவும் உத்தரவிட்டு இருக்கிறேன்.

ஒத்துழைப்பு

ஏற்கனவே பல இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டன. இப்பணிகளை இப்போது செய்யா விட்டால் கரைகளில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருமளவில் வீணாகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த பணிகளை செய்வதன் காரணமாக கால்வாய் செல்லும் பகுதியில் குடிநீருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இந்த பணியை செய்து முடித்து கீழ்பவானி பிரதான கால்வாயை சீரமைத்திட விவசாயிகள் அரசுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story