தொழிலாளி வெட்டிக்கொலை
மன்னார்குடி அருகே வீட்டின் முன்பு நின்று தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி;
மன்னார்குடி அருகே வீட்டின் முன்பு நின்று தகராறு செய்த தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
வேலையில் இருந்து நீக்கினார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேல திருப்பாலக்குடி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சுவேந்திரன்(வயது 35). தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த விவசாயி சக்கரவர்த்தியிடம் (42) கடந்த 10 வருடங்களாக வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் சக்கரவர்த்தி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுவேந்திரனை வேலையில் இருந்து நீக்கினார். இதனால் சக்கரவர்த்திக்கும், சுவேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சுவேந்திரன் அடிக்கடி சக்கரவர்த்தி வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் மாலையும் வழக்கம்போல் சக்கரவர்த்தி வீட்டிற்கு சென்ற சுவேந்திரன் வீட்டு வாசலில் நின்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது சக்கரவர்த்தி வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தார். இதனால் இதுகுறித்து சக்கரவர்த்தியின் மனைவி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி, சுவேந்திரனை தேடி அவருடைய வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சுவேந்திரனை அாிவாளால் சக்கரவர்த்தி சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சுவேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுவேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சுவேந்திரன் மனைவி கவிதா கொடுத்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.