கடலை பயிர்களில் செம்பேன்-சிவப்பு கம்பளிப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
கடலை பயிர்களில் செம்பேன்-சிவப்பு கம்பளிப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகசூல் இழப்பு
அரியலூர் மாவட்டத்தில் தற்போது இறவை கடலை 4 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர் 25 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது. ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள கடலை பயிர்களில் செம்பேன் மற்றும் சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது.
செம்பேன் தாக்கிய செடிகளில், இலையில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு இலைகள் காய்ந்து, எரிந்ததை போன்று காணப்படும். சிவப்பு கம்பளிப்புழு உள்ள செடிகளில் இலைகள் ஒன்றோடொன்று பிணைந்து சுருண்டு காணப்படும். சிவப்பு கம்பளிப்புழு இலையில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் பக்கவாட்டு கிளைகள் மற்றும் இலைகள் இல்லாமல் தண்டு பகுதி மட்டும் காணப்படும். இதனால் மகசூல் இழப்பு அதிக அளவில் ஏற்படும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
செம்பேனை கட்டுப்படுத்த டைகோபால் 18.5 சதவீதம் இ.சி. ஏக்கருக்கு 250 மில்லி அல்லது புரொப்பர்கைட் 57 சதவீதம் இ.சி. 100 மி.லி. இதில் ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும். சிவப்பு கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 50 சதவீதம் இ.சி. பிளஸ் சைபர் மெத்திலின் 5 சதவீதம் இ.சி. 250 மி.லி. அல்லது எமாமெக்டின் பென்சோயட் 5 எஸ்.ஜி. 100 கிராம் அல்லது குளோரான்டிலிப்ரோல் 18.5 சதவீதம் 30 மி.லி. இவற்றில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். பூச்சி கொல்லியினை காலை அல்லது மாலை வேளையில் தெளிப்பதன் மூலம் இலைப்புழு மற்றும் காய்ப்புழுக்களை திறம்பட கட்டுப்படுத்த முடியும், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.