சோலார் பேனல்-குளிர்சாதன வசதியுடன் காவல்துறை கட்டுப்பாட்டு மையம்
தர்மபுரி 4 ரோட்டில் சோலார் பேனல்-குளிர்சாதன வசதியுடன் காவல்துறை கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.
தர்மபுரி நகரில் 4 ரோட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக சோலார் பேனலில் 2 அடுக்கு மாடியில் குளிர்சாதன வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தர்மபுரி எம்.பி.யின் சொந்த நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இதில் மேல் தளத்தில் காவலர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் கீழ் தளத்தில் பொது கழிப்பிடமும் அமைக்கப்படுகிறது. இந்த காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. செந்தில்குமார் எம்.பி. பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த காவல் கட்டுப்பாட்டு மையத்தில் டிஜிட்டல் விளம்பர பலகை அமைக்கப்பட்டு, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் இந்த கட்டுப்பாட்டு மையம் தொடர்ந்து பராமரிக்கப்படும். இந்த பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர் சேட்டு, நகராட்சி கவுன்சிலர் ஜெகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.