ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக போராட்டம்
கோவை மாநகராட்சியில் வேலை செய்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க வேண்டும், பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்களின் போராட்டம் 3-வது நாளாக நடந்தது.
இதற்காக அவர்கள் கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டியங்க சங்கத்தை சேர்ந்த தமிழ்நாடு செல்வம் தலைமையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் துய்மை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளுடன் தொழிலாளர் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, கலெக்டர் அறிவித்த ரூ.721-ஐ உடனடியாக வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
இதில் பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அத்துடன் தினக்கூலி தொடர்பாக பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறினார்கள். இதை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஏற்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
போராட்டம் தொடரும்
இதையடுத்து நேற்று காலையில் தூய்மை பணியாளர்கள் தமிழ்நாடு செல்வம் தலைமையில் வ.உ.சி. சிலை அருகே திரண்டு தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இது குறித்து தமிழ்நாடு செல்வம் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூறும்போது, கலெக்டர் தினக்கூலியாக ரூ.721 வழங்கலாம் என்று அறிவித்து உள்ளார். ஆனால் அந்த கூலி இதுவரை வழங்கவில்லை. அதுபோன்று வருங்கால வைப்புநிதி 2 மடங்காக பிடிக்கிறார்கள். இது குறித்து கேட்டால் தகவல் தெரிவிப்பது இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.