வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
x

தினக்கூலி பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்று 3-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

செங்கல்பட்டு,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த பூங்காவில் பணிபுரியும் 219 தினக்கூலி பணியாளர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு வந்தபோது பூங்கா நிர்வாகம் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையில் வருகையை பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கு தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பூங்காவில் 15 ஆண்டு காலமாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா நுழைவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூங்கா நிர்வாகம் சார்பில் முதல் நாளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சரியான உடன்பாடு ஏற்படாததால் கடந்த 2 நாட்களாக தினக்கூலி பணியாளர்கள் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்ட குழுவினர் நிரந்தரமாக பயோமெட்ரிக் வருகை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பூங்கா அதிகாரிகள் அதற்கு பயோமெட்ரிக் முறை மட்டுமே இனி வருங்காலங்களில் கடைபிடிக்கப்படும் என்றும், அதனை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தினக்கூலி பணியாளர்களிடம் தெரிவித்தனர். மற்ற 8 கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதற்கு போராட்ட குழுவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து வருகிறது. தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் காரணமாக குறைவான எண்ணிக்கையில் உள்ள பூங்கா நிரந்தர பணியாளர்கள் மூலம் வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு சரியான நேரத்திற்கு உணவுகள் வழங்க முடியவில்லை.

இதனால் பூங்காவில் உள்ள விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காவில் விலங்குகள் இருப்பிடங்கள், கூண்டுகள், பூங்கா வளாகம் போன்ற பகுதிகளில் அன்றாட பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூங்கா வளாகத்தில் தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் 3-வது நாளாக தொடர்ந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story