இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கான செலவு விவரங்களை, ஒருவர் ஓர் அமைப்புக்கு தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணமே ஒப்பந்தப் புள்ளியாகும்.
ஒப்பந்தப்புள்ளி பெட்டி
பொதுவாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, வீட்டு வசதித் துறை, குடிசை மாற்றுவாரியம், விவசாய பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதிய கட்டுமானப்பணிகள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வதற்கு அந்தந்தத் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
இதில் கலந்துகொண்டு பணிகளை செய்ய விரும்பும் ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் பணிகளை நிறைவேற்றி தருவதற்கான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள்.
ஆணைக் கடிதம்
குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை அதிகாரிகள் திறந்து, அதில் குறைந்த தொகை பதிவு செய்துள்ள தரமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து அவருக்கு பணிகளை நிறைவேற்றி தருவதற்கான ஆணைக்கடிதம் வழங்குவார்கள். இதனை பெற்ற ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வேலையை முடித்துத் தருவார்கள். ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் விண்ணப்பங்களை போடமுடியாமல் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதமும், சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒப்பந்தப்புள்ளிக்கு
ஆன்லைன் முறை
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிக்கும் ஆன்லைன் முறையை கடந்த 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் இனி http://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-
வரவேற்கத்தக்கது
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறையின், நீர்வள ஆதாரத்துறை முதன்மை தலைமை பொறியாளர் (ஓய்வு) ஏமராஜ் கூறும் போது, 'ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்பார்கள். இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதுடன், ஒளிவு மறைவற்ற நிர்வாகமும் இருக்கும். இது அரசுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் நல்லதுதான். அதிகாரிகளுக்கு அழுத்தம் தருவதும் இருக்காது. ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி மூலம் எந்த பிரச்சினையும் ஏற்படாததுடன், வேலை செய்ய விரும்பும் அனைத்து ஒப்பந்ததாரர்களும் இதில் கலந்து கொள்ள முடியும். பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கும் கொண்டுவர எளிதாக இருக்கும். அரசின் அறிவிப்பு முழு மனதுடன் வரவேற்கிறேன்' என்றார்.
தவறுகள் நடக்க வாய்ப்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எஸ்.குணமணி கூறும் போது, 'ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் விண்ணப்பத்தை முறையாகப் பெற்று தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் அனைவருக்கும் பணிகளை ஒதுக்கி தருவதுடன், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும் என்று கோரி பலமுறை சங்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். காலம் தாழ்த்தி இப்போதுதான் அரசு ஒப்பந்தப்புள்ளியை ஆன்லைனில் மட்டுமே கோர முடியும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் இந்த முறையிலும் பல முறைகேடுகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருப்பதால், இதனை முறையாக நடத்தி அனைவரின் ஆதரவையும் அதிகாரிகள் பெறவேண்டும். குறிப்பாக வங்கி டிமாண்டு டிராப்ட் (டி.டி.) நேரில்தான் வழங்க வேண்டும் என்கின்றனர். இதனாலும் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணிகளுக்கு குறைந்த கட்டணத்தை பதிவு செய்துவிட்டு, அதிகளவில் கமிஷனும் வழங்க வேண்டியிருப்பதால் தரமான கட்டுமானங்களை எதிர்பார்க்க முடியாது. எனவே இந்தத் திட்டம் பெயரளவில்தான் இருக்கும் என்றுதான் தெரிகிறது' என்றார்.
முன் அனுபவம் இல்லை
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மகேந்திரன்:-
ஆன்லைன் முறை டெண்டர் ஒளிவு, மறைவு இல்லாமல் நடைபெற அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் உதவுகிறது. மேலும் ஒளிவு மறைவு இல்லாமல் நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒப்பந்ததாரர்களுக்கு உதவி புரிய வேண்டும். அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையை பொறுத்த வரையில், ஆன்லைனில் டெண்டரில் அலுவலர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் எவ்வித முன்அனுபவமும் கிடையாது. இந்த சூழ்நிலையில் அரசு உடனடியாக ஆணை பிறப்பித்து இருப்பது சற்று வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆன்லைன் டெண்டரில் அந்தந்த மாவட்ட ஒப்பந்ததாரர்களே கலந்து கொண்டு பயன் அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரவேற்கக்கூடியது
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சரவணகுமார்:-
ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோர முடியும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கக்கூடியது. முன்பெல்லாம் இன்னார்தான் ஒப்பந்தப்புள்ளி கோர முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு உள்ளது. இதில் சரியான தொகையை பதிவு செய்யும் தரமான ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் கிடைப்பதால் கட்டுமானமும் தரமானதாக இருக்கும்.
அதேநேரம் அதிகாரிகள் தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான ஆணை கடிதம் வழங்க முடியாது. இதில் வெளிப்படைத்தன்மை இருப்பதால் அரசின் திட்டங்கள் திட்டமிட்ட காலத்தில் பொதுமக்களை சென்று அடையும். பணிகளும் தகுதி உள்ள அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் கிடைக்கும். யாருக்கும் தனிப்பட்ட முறையில் பாகுபாடு காட்ட முடியாது.
பயிற்சி அளிக்க வேண்டும்
ராயர்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சக்திவேல்:-
ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது நல்ல விஷயம் தான். ஆனால் படிக்காத சாமானிய ஒப்பந்ததாரர்கள் இதில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்த ஒப்பந்ததாரர்கள் ம்ட்டுமே பங்கேற்க முடியும்.
மேலும் ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கோருவது என்பது அரசு அலுவலர்களுக்கும் புதிதான ஒன்று. எனவே நடைமுறை சிக்கல் உள்ளது. ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடர்பாக அரசு அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான பயிற்சியை அரசு கொடுக்க வேண்டும்.
வெளிப்படை தன்மை
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் ஏ.பி.ஆர்.சண்முகம்:-
ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதனை அனைத்து தரப்பினரும் வரவேற்பார்கள். இதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதுடன், ஒளிவு மறைவற்ற நிர்வாகமும் இருக்கும். பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர எளிதாக இருக்கும். அரசின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன்.
ஆன்லைன் டெண்டரில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க முடியும். பாக்ஸ் வைத்தால் யார் போடுகிறார்கள் என்பது தெரியும். இந்த முறையில் டெண்டரில் பங்கேற்கும் நபர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது.
தடுக்க முடியாது
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீரப்பன்:-
செல்வாக்கு நிறைந்தவர்கள் மட்டுமே பெட்டியில் டெண்டர் விண்ணப்பத்தை போட முடியும். அதாவது அவ்வாறு டெண்டர் போடுவதை மற்றவர்கள் தடுக்க நிறைய வழிகள் உள்ளது. ஆனால் ஆன்லைனில் ஒப்பந்தப்புள்ளி கோரும்போது, அவர் எங்கிருந்து ஒப்பந்தப்புள்ளி கோருகிறார் என்பதே யாருக்கும் தெரியாது. எனவே தனிநபர் ஒருவர் ஒப்பந்தப்புள்ளி கோருவதை யாரும் தடுக்க முடியாது. அரசின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.