தொடர் மழை எதிரொலி: ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


தொடர் மழை எதிரொலி: ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x

தொடர் மழை எதிரொலியாக ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ஆத்தூரில் 23.6 அடி உயரம் கொண்ட காமராஜர் அணை உள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகள், சின்னாளப்பட்டி பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இதேபோல் ஆத்தூர், செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாசன நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆடலூர், பன்றிமலை, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, தாண்டிகுடி உள்ளிட்ட மலைக்கிராமங்களில் மழை பெய்யும்போது, காமராஜர் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வந்தது.

இந்தநிலையில் தொடர் மழை எதிரொலியாக காமராஜர் அணை தனது முழு கொள்ளளவான 23.6 அடியை நேற்று எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்தது. அணை நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Related Tags :
Next Story