நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை 6 இடங்களில் மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. குறிப்பாக அவலாஞ்சி, கூடலூர், அப்பர் கூடலூர், அப்பர் பவானி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையுடன் சேர்ந்து காற்றும் வீசுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன.
மண்சரிவு
ஊட்டி லவ்டேல், மஞ்சூர்-எடக்காடு சாலை, பெர்ன்ஹில்- தீட்டுக்கள் சாலை, ஆடா சோலை சாலை, படகு இல்லம் சாலை, எச்.பி.எப். சாலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மட்டுமின்றி எடக்காடு, பிக்கட்டி பாதகண்டி, அம்பல மூலா, இத்தலார், எமரால்டு உள்ளிட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.