தொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!


தொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
x
தினத்தந்தி 17 Dec 2023 10:45 PM IST (Updated: 17 Dec 2023 10:49 PM IST)
t-max-icont-min-icon

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 மாவட்டங்களிலும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சராசரியாக 28 செ.மீ. மழை நெல்லையில் பெய்துள்ளது. 1,200 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தாமிரபரணி ஆற்றில் சுமார் 45 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. தாமிரபரணியில் தண்ணீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக நெல்லையில் 163 மின் மாற்றிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மூலைகரைப்பட்டி பகுதியில் துணை மின் நிலையம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு இக்கட்டான சூழலையும் சமாளிக்க தயார்நிலையில் பேரிடர் மையம் செயல்படுகிறது.

ஆவின் மூலம் நெல்லையில் 33 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படும். கூடுதலாக 2 டேங்கர்கள் மூலம் மதுரையில் இருந்து பால் கொண்டு வரப்படுகிறது. மீட்புப்பணியில் 100-க்கும் மேற்பட்ட ஜே.சி.பி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதனிடையே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை மாவட்ட மக்கள் 0462-2501012 என்ற எண்ணிலும்,

தூத்துக்குடி மாவட்ட மக்கள் 0461-2340101 என்ற எண்ணிலும்,

குமரி மாவட்ட மக்கள் 04652-231077 என்ற எண்ணிலும்,

தென்காசி மாவட்ட மக்கள் 04633-290548 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்ட மக்களும் 1070,1077 போன்ற அவசரகால கட்டுப்பாட்டு மைய எண்களையும் அவசர உதவிக்கு அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9445869848 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story