தீப்பிடித்து எரிந்த கண்டெய்னர் லாரி
ஊத்துக்குளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நூல்கள் கருகி சாம்பல் ஆனது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீ விபத்து
அரியானா மாநிலத்தில் இருந்து நூல்களை மூட்டைகளில் ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செயல்படும் நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்த லாரி சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஊத்துக்குளியை அடுத்த செங்கப்பள்ளி பகுதியில் வந்தது. அப்போது கண்டெய்னரில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதை பார்த்த லாரியின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் லாரி டிரைவரிடம் தெரிவித்தனர்.
உடனே டிரைவர் கண்டெய்னர் லாரியை சாலையோரமாக நிறுத்தினார். அதற்குள் தீ குபுகுபுவென்று எரிய தொடங்கியது. மேலும் கண்ெடய்னர் முழுவதும் பரவியது. இது ஊத்துக்குளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரூ.15 லட்சம் நூல்கள் எரிந்து நாசம்
இதையடுத்து ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, அவினாசி, பெருந்துறை பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனம் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் நூல்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.