கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்


கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க தலைவர்களுக்கு தொடர்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர்
x
தினத்தந்தி 17 Oct 2022 1:15 AM IST (Updated: 17 Oct 2022 11:41 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க. உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம்


பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சேலம், அக்.17-

கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க. உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுக்கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று இரவு அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு அறிக்கையில், உலக அளவில் பசி, பட்டினியோடு மக்கள் வசிக்கும் 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 107-வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பணம் வீக்கம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கியும் கூறியுள்ளது. நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். வைத்து நாட்டில் மதகலவரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

பா.ஜ.க. கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.

நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி வழங்கக்கூடாது. அப்படி வழங்கினால் பலவேறு கட்சிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பேச்சு பேட்டை ரவுடி மாதிரி இருக்கிறது. இந்தி திணிப்பை கண்டித்து அ.தி.மு.க.வால் எதுவும் பேசமுடியாது. ஏனென்றால் அ.தி.மு.க. பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏதாவது கருத்து தெரிவித்தால் ரெய்டு வந்துவிடும் என்ற அச்சத்தில் அ.தி.மு.க.வினர் இருக்கின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவரம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அ.தி.மு.க. ஆட்சியில் ஏன் விசாரணையை தீவிரப்படுத்தவில்லை. தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளையில் அ.தி.மு.க உயர்மட்ட தலைவர்களுக்கு தொடர்பு உள்ளது.

5 தொகுதிகளுக்கு குறி

நாடாளுமன்ற தேர்தலை வைத்து தமிழகத்திற்கு மத்திய மந்திரிகள் படையெடுத்து வருகின்றனர். இங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகளை நம்பவில்லை. தமிழகத்தில் 5 தொகுதிகளை குறி வைத்து ஒரு தொகுதிக்கு 3 மத்திய மந்திரிகள் என்று தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். மத்திய அரசு பணத்தில் தேர்தல் பணிகளை செய்வதா?. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 4 மாதங்களில் 450 டி.எம்.சி. தண்ணீர் உபரியாக கடலில் வீணாக கலந்துள்ளது. எனவே, அதை தடுக்க உரிய திட்டம் வகுக்க வேண்டும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


Next Story