பள்ளப்பட்டியில் ஆலோசனை கூட்டம்
பள்ளப்பட்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டியில் வருகிற 12-ந் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாக்டர் அரவிந்த்செல்வன், பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன், துணைத்தலைவர் லோகேஷ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கலைமணி, ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பைபாஸ் வைரம், பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளப்பட்டியில் முத்துராமலிங்கபுரம் காலனியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த முகாம்களில், சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், தோல் நோய் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்பநல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.