மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில்மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும்கலெக்டர் பழனி தகவல்


மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில்மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும்கலெக்டர் பழனி தகவல்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் மேலும் 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணைக்க முயற்சி எடுக்கப்படும் என்று கலெக்டர் பழனி கூறியுள்ளார்.

விழுப்புரம்

ஆலோசனைக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் சார்பில் திட்டங்கள் விளக்கம் மற்றும் விளைபொருட்கள் நேரடி விற்பனை வாய்ப்பு மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் அரசு அலுவலர்கள், மக்களுடன் மிகுந்த தொடர்பில் இருக்க வேண்டும். தற்போது விவசாயம் உற்பத்தி, நோய்த்தடுப்பு இவற்றை தாண்டி அடுத்த நிலையான விற்பனை, மதிப்பு கூட்டுதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் உத்திகளை மேற்கொள்ள வேண்டும். நம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கரும்பானது சர்க்கரை ஆலைகளுக்கும், நெல், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி போன்றவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் மற்றும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கும் என 50 சதவீத விளைபொருட்கள் அரசு சார்ந்த விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத விளைபொருட்கள் தனியார் வியாபாரிகளுக்கு, எதிர்பார்த்த விலை கிடைக்காமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மின்னணு தேசிய வேளாண் சந்தை

மாவட்டத்தில் காராமணி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. காராமணி பயிருக்கு மிக குறைந்த விற்பனை வாய்ப்பு உள்ளது. இதற்கு விற்பனை வாய்ப்புகள் ஏற்படுத்தவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராயவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் இதுவரை 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இணைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும், மின்னணு தேசிய வேளாண் சந்தை தொடங்க முயற்சிகள் எடுக்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் இயங்கி வரும் 26 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் அரசு சார்ந்த விற்பனை மையங்களில் விற்பனை செய்ததுபோக மீதமுள்ள 3 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தில் சேமிப்பு கிடங்குகள் சிப்பம் கட்டும் அறை, குளிர்பதன கிடங்குகள், குளிர்பதன வசதியுடன் கூடிய வாகனம், ஏற்றுமதிக்கூடம் போன்ற கட்டமைப்புகளுக்கு தகுதியுள்ள நபருக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) சத்தியமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story