கட்டுமான தொழிலாளர்கள் பரிந்துரை ஏதும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்
நலவாரியத்தின் மூலம் வீடு கட்ட கடன் உதவி பெற பரிந்துரை ஏதும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
நலவாரியத்தின் மூலம் வீடு கட்ட கடன் உதவி பெற பரிந்துரை ஏதும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
கடன் உதவி
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இணையதளத்தில் சொந்தமாக வீடு கட்ட, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் வரை நிதி உதவிக்கு விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் வீட்டு வசதி திட்டத்தில் இணையதளம் வாயிலாக 300-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இணையதளத்தில் கட்டுமான தொழிலாளர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் தாமாகவே விண்ணப்பிக்கலாம். மேற்படி வீட்டு வசதி திட்டம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக எவ்வித கட்டணமும் இல்லாமல் செயல்படுத்தப்படுகிறது.
ஏமாற வேண்டாம்
வீட்டு வசதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு கட்டுமானம் உடல் உழைப்பு உட்பட்ட 18 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு யாருடைய பரிந்துரையும் இல்லாமல் தொழிலாளர்கள் உறுதிமொழியினை மட்டும் ஏற்றுக்கொண்டு விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது. தற்போது வீட்டு வசதி திட்டம் தொடர்பாக இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கும் யாருடைய பரிந்துரையும் தேவையில்லை.
ஆதலால் தொழிலாளர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் விழிப்புணர்வுடன் இணையதளத்தில் தாமாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அணுகலாம்
மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கட்டுமான தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை நேரடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.