கிண்டியில் கட்டிடத்தொழிலாளி குத்திக்கொலை - மனைவியுடன் கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரம்
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி எச்சரித்த கட்டிடத்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் சங்கர் (வயது 40). இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையன்குறிச்சி ஆகும்.
இவர் சென்னையில் இருந்தாலும், மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊரில் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த அவரது உறவினரான வீரபத்திரன் (40) என்பவர் சங்கரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த சங்கர், போன் செய்து தனது மனைவியை கண்டித்தார். மேலும் மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி வீரபத்திரனையும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வீரபத்திரன், மலையன்குறிச்சியில் இருந்து சென்னை வந்தார். கிண்டியில் சங்கர் தங்கி இருந்த கம்பெனிக்கு குடிபோதையில் சென்று அவருடன் வாக்குவாதம் செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரமடைந்த வீரபத்திரன், தன்னிடம் இருந்த கத்தியால் சங்கரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சங்கர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடனே வீரபத்திரன் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பொது மக்கள் பிடித்து வைத்திருந்த வீரபத்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி சங்கர் எச்சரித்ததால், அவரது மனைவி தன்னிடம் பழகுவதை தவிர்த்ததால் ஆத்திரத்தில் சென்னை வந்து சங்கரை கொலை செய்ததாக போலீசாரிடம் வீரபத்திரன் கூறினார்.